அன்பினிய தமிழ் உறவுகளே !
தமிழீழத்தகவல் நடுவம் எனும் T.I.B இனது வரலாற்று தொடக்கத்தின் ஒரு சிறிய கண்ணோட்டம்.
1983 ன் பிற்பகுதியில் இலங்கையில், யுத்தகாலம் முனைப்படைந்திருந்த போது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருந்த தமிழர்கள் இலங்கை நிலவரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதிருந்த நிலைமையில், பிரித்தானியாவில் படித்துக்கொண்டிருந்த “விடுதலை விரும்பிகள்” என்ற பெயரில் இயங்கிய தமிழ் இளைஞர்களால் இலங்கையில் உள்ள தமது உறவுகள்,நட்புக்கள் நிலை குறித்து அறிந்துகொள்ள உருவாக்கப்பட்டதே இந்த உலக முதலாவது அவசரகால கண்டு பிடிப்பு. 12.12.1984 புதன்கிழமை இல் இருந்து Home Telephone Answer Machine இல் 1 நிமிட செய்தி சேவையில் T.I.B. பயணிக்க தொடங்கியது.
ஆரம்பத்தில்அன்றய தினத்தில் பலமான 5 விடுதலை அமைப்புக்களையும் ஆதரித்து செயல்பட்டு வந்திருந்த போதிலும்,
பின்னர் இலங்கை போராட்ட காலத்தின் தேவை கருதி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழக வெளிநாட்டு அமைப்புகளின் செயற்பாடுகளின் மிக முக்கிய நாளாந்த சேவையாக இது விரவியது. London ல் இருந்து, ஜேர்மனி, சுவீஸ், பிரான்ஸ், ஹொலண்ட், இத்தாலி, பெல்ஜியம், டென்மார்க், நோர்வே, சுவீடன், மற்றும் கனடா மலேசியா போன்ற நாடுகளின் கழக கிளை அமைப்புகளால் தினமும் மாலை 8 மணி முதல் ஒளிபரப்பாக ஆரம்பிக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் தொலைபேசி வழியாக நாள்முழுவதும் இதன் வாயிலாக செய்தி அறிந்தபடி தொடர்ந்திருந்தது வரலாறு. இதன் விரவலில், புலம்பெயர் தேசங்களில் பலமான பாரிய எழுச்சி கிளம்பிட வழிவகுத்ததும் சரித்திரம்.
இம்முறை செய்தித் தொடர்பு பின்னர், ஏனைய விடுதலை சார்ந்த அமைப்புகளாலும் தொடரப்பட்டிருந்தது. கால மாற்றத்தினூடு தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைய, ஊடக தொழில் நுட்பம் மேம்பட்ட நிலையில் இக்குறிப்பிட்ட செய்தித் தொடர்பு நுட்பத் தேவை அருக ஆரம்பித்தது. ஆயினும் 90 களின் பிற்பகுதியில், அரசியல்/விடுதலை சார்பினின்று மெலிதாக அருகி, T.I.B. போராட்ட வரலாற்றின் சான்றாக சாட்சியாக இன்றும் தன் வழி சேவை தொடர்கின்றது.
இனிய உறவுகளின் ஆதரவோடு .தமிழீழத்தகவல் நடுவத்தின் பயணம் “TIB” ஆக தொடரும் என்பது எமது திண்ணமான நம்பிக்கை.