இலங்கை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இன்று வியாழக்கிழமை முற்பகல் 10மணியளவில் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.
உத்தியோகபூர்வமாக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலாவது விமானமகா ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட 16 பேர் மட்டுமே பயணித்தனர்.அவர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடி அகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசா வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளத அதேவேளை நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 2250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் வடக்கில் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடையக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேபோன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் மறைமுகமான தொழில் வாய்ப்புக்களும் உருவாகும் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும்
குறிப்பிட்டுள்ளார்.