நேற்று முன்தினம் 07ஆம் திகதி ஆரம்பித்த யாழ் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று வருகின்றனர்.
என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்திக் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ் கோட்டை முற்றவெளியில் தற்போது நடைபெறுகின்றது.
நிதியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இடம்பெறுகின்றது. இக்கண்காட்சியின் மூன்றாம் நாளான இன்று பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா இரண்டாவது நாளான நேற்றுடன் சுமார் ஐம்பதாயிரம் பேர் கண்காட்சி கூடங்களுக்கு வருகை தந்ததாக நிதியமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாள் ஆரம்பத்தின் போது விடுமுறை தினம் என்பதால் மக்கள் வருகை அதிகமாகவே காணப்பட்டது.
கண்காட்சிகூடத்தின் முகப்பு பகுதியின் ஊடாக உள்நுழைந்ததும் மக்கள் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிகளின் கரும்பீடங்களில் நிறைந்து காணப்பட்டனர். இதன்போது மக்கள் குடும்பங்களாக, குழந்தைகளுடன் கண்காட்சி கூடங்களுக்கு வருகை தந்தனர். சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், இராட்டினம் மற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் காணப்பட்டமையால் பொது மக்களின் வருகை அதிகமாகவே காணப்பட்டது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் முகாமிட்டிருக்கும் ஊடகப்பகுதிக்கு பெரும்பாலும் மாணவர்களும் பல்கலைகழக மாணவர்களும் அதிகளவில் கலந்துகொண்டு தங்களது ஆர்வத்தை வெளிக்காட்டினர்.
குறிப்பாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக மையத்துக்கு பல்கலைகழக மாணவர்கள் பெருமளவில் வருகை தந்து பத்திரிகைகள் செயற்பாடு தொடர்பாக ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
முதற்தடவையாக என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற பாரிய தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதால் மக்கள் மத்தியில் ஆர்வம் குடிகொண்டிருப்பதை காணமுடிகிறது.தினமும் இரவு ஏழு மணி முதல் இசைக் கச்சேரி நடைபெறுவதால் மாலையானதும் பொதுமக்களின் வருகை அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.